சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு சுருண்டது. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் எந்த ஒரு கட்டத்திலும் ஹைதராபாத் அணியை மீண்டுவர அனுமதிக்கவில்லை. இதனால் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு பட்டம் வெல்லும் ஹைதராபாத் அணியின் கனவு நிறைவேறாமல் போனது.
இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
கொல்கத்தா அணி வீரர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள். துரதிருஷ்டவசமாக மிட்செல் ஸ்டார்க்மீண்டும் ஒரு முறை எங்களுக்கு எதிராக போட்டியை திருப்பிவிட்டார். நாங்கள் போதுமான அளவிலான சிறந்தஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கொல்கத்தா அணி எங்களை முழுமையாக தோற்கடித்துவிட்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சில பவுண்டரி களை அடித்திருந்தால், அது முன்னேறிச் செல்ல வழிவகுக்கும். ஆனால் கொல்கத்தா வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு அதை தடுத்தனர். அவர்கள், எங்களுக்கு எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசியதை போன்றே இறுதிப்போட்டியிலும் கொல்கத்தா அணியினர் செயல்பட்டார்கள். சிறந்த செயல் திறனுக்காக அவர்களை, பாராட்ட வேண்டும். இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் சற்று தந்திரமானது. இது 200-க்கும்அதிகமான ரன்களை குவிக்கக்கூடிய ஆடுகளமாக நினைக்கவில்லை. 160 ரன்கள் வரை எடுத்திருந்தால் ஆட்டத்தில் நாங்கள் இருந்திருப்போம்.
கூடுதல் ரன்கள் எடுத்திருந்தால் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த சீசனில் நேர்மறையான விஷயங்கள் பலவற்றை பெற்றுள்ளோம். குறிப்பாக பேட்டிங்கில் எங்களது வீரர்கள் விளையாடிய பாணி சிறப்பானது. 250 ரன்கள் எடுப்பது மட்டுமின்றி மூன்றுமுறை சாதனை படைக்க நிறையதிறமை வேண்டும். அதிக அழுத்தமான சூழ்நிலைகளில், அவர்கள்ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு பாட் கம்மின்ஸ் கூறினார்.