பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்தார் கே.எல்.ராகுல்


பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில்தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணிவீரர்கள் நேற்று பெர்த்தில்உள்ள வாகா மைதானத்தில் தங்களுக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்கள். அப்போது கே.எல்.ராகுல் 29 ரன்கள் எடுத்திருந்த போது, பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து அவரது வலது முழங்கையை பலமாக தாக்கியது.

இதையடுத்து அணியின் உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசித்த கே.எல்.ராகுல் மைதானத்தில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்யில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இதனால் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர், காயம் அடைந்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், தற்போதுதான் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மையை கண்டறிவதற்கு சிறிது நேரம் ஆகும்” என்றன. கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டிக்கு பிறகு விளையாடும் லெவனில் கே.எல்.ராகுலுக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை அவர், பெரிதும் நம்பியிருந்தார். கே.எல்.ராகுல் கடைசியாக 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரி
யன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் விளையாடிய 9 இன்னிங்ஸில் 2 அரை சதங்கள் மட்டுமே அவர், அடித்திருந்தார்.

விராட் கோலி ஸ்கேன் பரிசோதனை: இதற்கிடையில், சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழ், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு நேற்று முன்தினம் (வியாழன்) குறிப்பிடப்படாத காயத்துக்காக ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார். அவர், 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் ‘‘விராட் கோலி குறித்து இப்போது எந்த கவலையும் இல்லை’’ என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் சமீபகாலமாக விராட் கோலி தடுமாறி வருகிறார். கடைசியாக அவர், 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் 36 வயதான விராட் கோலி, 14 இன்னிங்ஸில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி கடைசியாக விளையாடிய 60 இன்னிங்ஸில் 31.68 சராசரியையே கொண்டுள்ளார்.

x