தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு


அர்ச்சனா

திருப்பூர்: திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவி அர்ச்சனா. இவரது தந்தை ஜெயபால், மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். தாயார் சத்யா.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அரச்சனா பங்கேற்றார். 19 வயதுக்குட்பட்டோருக் கான 100 மீட்டர், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கமும், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளியும் வென்றார்.

இதையடுத்து, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பூர் வளையங்காட்டில் வசித்து வரும் அர்ச்சனா, 7-ம் வகுப்பு முதல் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார். அதேபோல், தென்னிந்திய அளவில் 2 முறையும், தேசிய அளவில் 3- வது முறையாகவும் நீச்சல் போட்டியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x