204 பேர் மட்டுமே தேவையாக உள்ள நிலையில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்துக்கு 1,574 வீரர்கள் பதிவு


மும்பை: ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்துக்கு 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்காக 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 31-ம் தேதி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்தன. இதில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1,574 பேர் கொண்ட இந்த பட்டியலில் இருந்து இறுதிக்கட்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அதில் இடம் பெறும் வீரர்கள் ஏலத்தில் பல்வேறு அணிகளால் ஏலம் எடுக்கப்படுவார்கள்.

கடந்த வாரம் விடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நட்சத்திர வீரர்களான ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தற்போது இவர்களது அடிப்படை விலை ரூ.2 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகையில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகேஷ் குமார், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், தீபக் சாஹர், இஷான் கிஷன், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், தேவ்தத் படிக்கல், கிருணல் பாண்டியா, ஹர்ஷால் படேல், பிரஷித் கிருஷ்ணா, நடராஜன், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஏலத்தில் எந்த அணிகளாலும் ஏலம் எடுக்கப்படாத பேட்ஸ்மேன்களான சர்பராஸ் கான், பிருத்வி ஷா ஆகியோரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாக உள்ளது. பணிச்சுமை காரணமாக கடந்து ஐபிஎல் தொடரில் விளையாடாத இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இம்முறையும் ஏலப் பட்டியலில் இடம் பெறவில்லை.

அதேவேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதன்முறையாக ஐபிஎல் ஏலப் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஆண்டர்சன் கடைசியாக 2014-ம்ஆண்டு டி 20 போட்டியில் விளையாடியிருந்தார். மேலும் அவர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தொழில்முறை டி20 தொடர்களில் ஒன்றில் கூட இதுவரை பங்கேற்றது இல்லை. ஆண்டர்சன் தனது அடிப்படை விலையை ரூ.1.25 கோடியாக நிர்ணயித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காக அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நேத்ராவால்கரும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவரது அடிப்படை தொகை ரூ.30 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டு ஏலம் எடுக்கப்படாத ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயனின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் வரலாற்று சாதனையாக கடந்த ஆண்டு ரூ.24.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரனா மிட்செல் ஸ்டார்க்கின் அடிப்படை விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரும் ரூ.2 கோடி அடிப்படை விலையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இத்தாலியை சேர்ந்த 24 வயதான மிதவேகப்பந்து வீச்சாளரான தாமஸ் டிராக்கா தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இத்தாலியில் இருந்து பெயரை பதிவு செய்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தாமஸ் டிராக்கா.

கடந்த ஜூன் மாதம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான தாமஸ் டிராக்கா இதுவரை போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக்கில் தாமஸ் டிராக்கா 6 ஆட்டங்களில் 11 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்திருந்தார். சமீபத்தில் அவர், சர்வதேச லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஐபிஎல் ஏலப்பட்டியலில் தாமஸ் டிராக்கா ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரூ.30 லட்சம் அடிப்படை தொகையில் உள்ளார்.

மெகா ஏலத்தையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்தனர். ஒவ்வொரு அணியும் 25 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் மொத்தம் 250 வீரர்கள் இடம் பெறுவார்கள். ஏற்கெனவே 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதால் மெகா ஏலத்தில் 204 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக ரூ.120 கோடி செலவு செய்யலாம். இதில் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டன. இந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியிடம் கைவசம் ரூ.51 கோடி உள்ளது. மும்பை அணி ரூ.45 கோடியையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.45 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.41 கோடியையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.69 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.55 கோடியையும் மீதம்வைத்துள்ளன. அதேவேளையில்பஞ்சாப் கிங்ஸ் ரூ.110.5 கோடியையும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.83 கோடியையும், டெல்லி கேபிடல்ஸ் ரூ.73 கோடியையும், குஜராத் டைட்டன்ஸ் ரூ.69 கோடியையும் கையிருப்பு வைத்துள்ளன.

x