எவின் லீவிஸ் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்


ஆன்டிகுவா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஆன்டிகுவாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், சேம் கரண் 56 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் சேர்த்தனர். பில் சால்ட் 18, வில் ஜேக்ஸ் 19, ஜோர்டான் காக்ஸ் 17, ஜேக்கப் பெத்தேல் 27, ஆதில் ரஷித் 15 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் குடகேஷ் மோதி 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேத்யூ ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து 35 ஓவர்களில் 157 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரரான எவின் லீவிஸ் 69 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசி ஆதில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய பிரண்டன் கிங் 56 பந்துகளில், 30 ரன்கள் சேர்த்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்தில் வெளியேறினார். கீசி கார்ட்டி 19, கேப்டன் ஷாய் ஹோப் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது

x