மும்பை: இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 129 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களும், வில் யங் 138 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் விளாசினர். டேவன் கான்வே 4, டாம் லேதம் 28, ரச்சின் ரவீந்திரா 5, டாம் பிளண்டெல் 0, கிளென் பிலிப்ஸ் 17, இஷ் சோதி 7, மேட் ஹென்றி 0, அஜாஸ் படேல் 7 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4, ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 14 ஓவர்களை வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். சீராக
விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது போல்டானார். இதையடுத்து களமிறங்கிய முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அஜாஸ் படேல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 6 பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தை மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு விரைவாக சேர்க்க விராட் கோலி ஓடினார். அப்போது பந்தை சேகரித்த மேட் ஹென்றி மின்னல் வேகத்தில் த்ரோ செய்து ஸ்டெம்பை தகர்க்க விராட் கோலி விரக்தியுடன் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 31 ரன்களும், ரிஷப் பந்த் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 2, மேட் ஹென்றி ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் மேற்கொண்டு 6 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை விரைவாக இழந்து பின்னடைவை சந்தித்தது. கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.