கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இருந்து ஹாக்கி உள்ளிட்ட பிரதான போட்டிகள் நீக்கம்: இந்தியாவுக்கு கடும் பின்னடைவு


லண்டன்: கிளாஸ்கோவில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் இருந்து ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

23-வது காமன்வெல்த் விளையாட்டு வரும் 2026-ம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. முதலில் இந்த தொடரை ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணம் நடத்துவதற்கான உரிமையை பெற்றிருந்தது. ஆனால் அந்த நகரம் நிதிச்சுமை காரணமாக காமன்வெல்த் விளையாட்டை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. இதன் பின்னரே கிளாஸ்கோ நகரம் தேர்வானது. இந்நிலையில் இந்த தொடரை குறைந்த செலவில் நடத்தும் வகையில் 10 விளையாட்டுகள் கொண்ட பட்டியலை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி தடகளம் மற்றும் பாரா தடகளம், நீச்சல் மற்றும் பாரா நீச்சல், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங் மற்றும் பாரா டிராக் சைக்கிள், நெட்பால், பளுதூத்துக்குல் மற்றும் பாரா பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, பவுல்ஸ் மற்றும் பாரா பவுல்ஸ், 3x3 கூடைப்பந்து மற்றும் 3x3 வீல்சேர் கூடைப்பந்து ஆகிய 10 விளையாட்டுகள் மட்டுமே கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண தூரம் மற்றும் செலவை கருத்தில் கொண்டு சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவுகளுக்குள் உள்ள காட்ஸ்டவுன் ஸ்டேடியம், டோல்கிராஸ் சர்வதேச நீச்சல் மையம், எமிரேட்ஸ் மைதானம், ஸ்காட்டிஷ் வளாகம் ஆகிய 4 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் ஆகிய பிரதான போட்டிகள் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவுக்கு கடும் பின்னடைவைக் கொடுக்கக்கூடும். ஏனெனில் ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதில் துப்பாகி சுடுதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தளவாடங்கள் பிரச்சினை காரணமாக பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் போது நீக்கப்பட்டிருந்தது. இது கிளாஸ்கோ போட்டியிலும் தொடர்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் போது துப்பாக்கி சுடுதல் இடம் பெற்றிருந்தது. ஆனால் இதற்கான மையம் கிளாஸ்கோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இம்முறை இந்த போட்டி நீக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வில்வித்தை போட்டி கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் விளையாட்டுக்கு பின்னர் சேர்க்கப்படவில்லை.

2014-ம் ஆண்டில் ஹாக்கி மற்றும் மல்யுத்தத்தை நடத்திய கிளாஸ்கோ கிரீன் மற்றும் ஸ்காட்டிஷ் கண்காட்சி மையம் ஆகியவை தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாட்மிண்டன் போட்டி நடைபெற்ற சர் கிறிஸ் ஹோய் மைதானத்தில் இம்முறை டிராக் சைக்கிளிங் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பின்னர் அடுத்த இரு வாரங்களில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் ஹாக்கி சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்கள் கைப்பற்றியுள்து. அதேவேளையில் பாட்மிண்டனை பொறுத்தவரையில் இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 31 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.

துப்பாக்கி சுடுதலை பொறுத்தவரையில் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 63 தங்கம், 44 வெள்ளி, 28 வெண்கலம் என 135 பதக்கம் வென்றுள்ளது. மல்யுத்தத்தில் 49 தங்கம், 39 வெள்ளி, 26 வெண்கலம் என 114 பதக்கங்களை வேட்டையாடி இருந்தது. 2022-ம் ஆண்டு கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.

x