இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்: 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


முல்தான்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 152 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

முல்தானில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 366 ரன்களும், இங்கிலாந்து 291 ரன்களும் எடுத்தன. 75 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 59.2 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 0, ஸாக் கிராவ்லி 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆலி போப் 21, ஜோ ரூட் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 33.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆலி போப் 22, ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 16, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37, ஜேமி ஸ்மித் 6, பிரைடன் கார்ஸ் 27, மேத்யூ பாட்ஸ் 9, ஷோயிப் பஷிர் 0, ஜேக் லீச் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி 16.3ஓவர்களை வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வேட்டையாடினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான சஜித் கான் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக சஜித் கான் தேர் வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்டடெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 எனசமநிலையை அடையச் செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.

x