அக்.28 முதல் பிப்.11 வரை பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்


சென்னை: பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின தடகளப் போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 28 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 28-ல் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதில் சதுரங்கம், ஜூடோ, கடற்கரை கையுந்து பந்து, சாலையோர மிதிவண்டி, நீச்சல், ஸ்குவாஷ், கேரம், ஜிம்னாஸ்டிக், வாள்சண்டை, குத்துச்சண்டை, வளையப்பந்து, சிலம்பம், டேக்வாண்டோ, தடகளம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 11 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தங்குமிடம், உணவு, குடிநீர், கழிவறை வசதிகள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் செய்வதை உறுதி செய்யவேண்டும். விளையாட்டு போட்டிகளுக்கான மைதானங்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பயன்படுத்தும் தரத்தில் அமைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் குழு அமைக்கப்பட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றி எந்தவித புகாருக்கும் இடமளிக்காதவாறு நடைபெற வேண்டும். இந்த போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு உரிய குழுக்களை அமைத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உட்பட அலுவலர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x