46 ரன்களில் சுருண்டது இந்தியா; 5 வீரர்கள் டக் அவுட் - முதல் இன்னிங்ஸில் அலறவிட்ட நியூசிலாந்து! 


பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா 2 ரன்கள், விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர்.

இதன் பின்னர் மழை காரணமாக முதல் செஷன் சில நிமிடங்கள் தடைப்பட்டது. அதன்பின்னர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதன்பின்னர் ரிஷப் பந்த் 20 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்களில் சுருண்டது.

நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூர்கி 4 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

x