ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் ஹாக்கி அணிக்கு கோவில்பட்டி வீரர்கள் இருவர் தேர்வு


அருண், திலீபன்

கோவில்பட்டி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் கோவில்பட்டியைச் சேந்த 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹாக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இப்போட்டியில் 8 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் விளையாட உள்ளன. இதில், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் என்ற பெயரில் தமிழகம் களம் காண உள்ளது. இந்த அணியை சார்லஸ் குரூப்ஸ் உரிமையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல், ப்ரோ கபடி போன்று ஹாக்கி இந்தியா லீக் போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டி இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் தேடுவதற்கு நல்ல தளமாக அமையும். லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. 3வது நாளான நேற்று தமிழ்நாடு டிராகன் அணிக்காக தமிழக வீரர்கள் 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவில்பட்டி வீரர்கள் திலீபன், அருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

திலீபன் ரூ.5 லட்சத்துக்கும், அருண் ரூ.3.60 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி வீரரரான திலீபன், ஜூனியர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் விளையாடி பதக்கம் பெற்றுள்ளார். ஹாக்கி விளையாட்டின் மூலம் கடந்த மாதம் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ஜிஎஸ்டி-யில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளார்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி அணி வீரரான அருண், தற்போது ராமநாதபுரத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சப்-ஜூனியர் தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக, சப்-ஜூனியர் இந்திய பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முகாமில் இருந்து வருகிறார்.

இந்த 2 வீரர்களும் தமிழ்நாடு டிராகன் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ‘ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி’யின் தலைவர் மோகன் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

x