டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி ரன் குவிப்பார்: பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை


பெங்களூரு: அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி ரன் குவிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவதில்லை என்ற புகார் உள்ளது. தனது கடைசி 8 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு முறை மட்டுமே அரை சதம் விளாசியுள்ளார். இதனால், விராட் கோலி தனது ஃபார்மை இழந்துவிட்டார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று வந்த கவுதம் கம்பீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விராட் கோலி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது கூட அறிமுக வீரரிடம் இருக்கும் உத்வேகம் அவரிடம் உள்ளது. அவர் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார்.

வரவிருக்கும் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவுடனான தொடர்களில் அவர் அதிக ரன்களைக் குவிப்பார் என்று நம்புகிறேன். விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்ற எனது எண்ணங்கள் எப்பொழுதும் மிகத் தெளிவாகவே இருந்து வருகின்றன. அவர் இவ்வளவு காலமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். வரும் தொடர்களில் அவர் அதிக ரன்களைக் குவிப்பதை ரசிகர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

ஒரு மோசமான போட்டி அல்லது ஒரு சில டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் ஒரு வீரரை நாம் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் ஒரு வீரரை மதிப்பிட்டால் அது நியாயமாக இருக்காது.

ஒவ்வொருவருக்கும் அனைத்து நாட்களும் சிறப்பான நாட்களாக அமைந்து விடுவதில்லை. நமது வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்களை ஆதரிப்பதுதான் எனது பணி. வரும் தொடர்களிலும் அணியில் உள்ள 11 வீரர்களையும் உற்சாகப்படுத்தி ஆதரிப்பதுதான் எனது பணியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் முதல் டெஸ்ட்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் 16-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இதற்காக 2 அணி வீரர்களும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 முதல் 28 வரை புனேவிலும், 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை மும்பை வான்கடே ஸ்டேடியத்திலும் நடைபெறவுள்ளது.

x