புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பெத்தாங் போட்டியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
பிரெஞ்சு மக்களின் விளையாட்டான பெத்தாங் விளையாட்டு புதுச்சேரியின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும். இது பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விளையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநில திமுக விளையாட்டு மேம்பட்டு அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக பவள விழாவையொட்டி, பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 16-ம் ஆண்டு மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (அக்.12) தொடங்கியது.
பி.எல்.டி தலைவர் அருமை செல்வம் முன்னிலையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, தானும் பெத்தாங் விளையாடினார். இதில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து சுமார் 41 கிளப்புகளை சேர்ந்த 307 அணிகள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எமிலன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.