டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக நடால் அறிவிப்பு


மாட்ரிட்: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டென்னிஸ் ஜாம்பவான்களில் ஒருவரான ரபேல் நடால் (ஸ்பெயின்) அறிவித்துள்ளார்.

38 வயதாகும் ரபேல் நடால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிச் சுற்றுப் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக நேற்று அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரபேல் நடாலின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் டென்னிஸ் உலகில் கோலோச்சிய 3 ஜாம்பவான்களில் ஒருவராக ரபேல் நடால் இருக்கிறார். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் 3-வது ஜாம்பவானாக ரபேல் நடால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து உள்ளார். இதில் பெடரர் ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் தற்போது நடால் ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளி யிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகள் எனது வாழ்நாளில் கடினமான ஆண்டுகள். என்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை. நவம்பரில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிதான் என்னுடைய கடைசி விளையாட்டாக இருக்கும். தகுந்த நேரத்தில் எனது ஒய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. இந்நிலையில்தான் நேற்று தனது ஒய்வு முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடாலால் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பிரகாசிக்க முடியவில்லை. அவர் கடைசியாக 2022-ம் ஆண்டில்தான் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் வரிசையில் ரபேல் நடால் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஜோகோவிச் 24 பட்டங்களுடன் உள்ளார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 63 ஏடிபி தொடர்களிலும் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

x