சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பளு தூக்கும் போட்டியில் தமிழக அணியினர் 14 பதக்கங்களை வென்று அசத்தினர். அவர்களை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
முதலாவது அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகள் (2024) கடந்த மாதம் 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் சத்தீஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் நடத்தப்பட்டது. இப்போட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறை நடத்தியது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுதூக்கும் குழு (பளுதூக்குதல், வளுதூக்குதல், யோகா) அணியைச் சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழக காவல்துறை அணி ஒரு தங்கம், மூன்று வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்தது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தமிழக போலீஸாரை, டிஜிபி-யான சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். உடன் கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், சட்டம் ஒழுங்கு ஏஐஜி ஸ்ரீநாதா, ஆயுதப்படை டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் இருந்தனர்.