மின் வாரிய கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் தேர்வு


தமிழ்நாடு அணி வீரர்கள் விநாயகம், தினேஷ்

கோவை: கோவையில் நடைபெற்று வரும் அனைத்து மாநில மின்வாரியங்களுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில், அனைத்து மாநில மின்வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை பீளமேடு, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் சத்தீஸ்கர் அணி 20 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் மகேஷ்குமார் தாகூர் அதிகபட்சமாக 47 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இரண்டாவதாக பேட்டிங் செய்த கர்நாடகாவின் கேபிடிசிஎல் மின்வாரிய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 89 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ராஜேஷ்குமார் 36 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். மற்றொரு அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 19.5 ஓவர்களின் முடிவில் 101 ரன்களை எடுத்தது. அற்புதசாமி 21 ரன்களை எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த ஒடிசா மின்வாரிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி பந்து வீச்சாளர்கள் விநாயகம் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களையும், தினேஷ் என்ற வீரர் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் தமிழ்நாடு மின்வாரிய அணியும், கர்நாடக மின்வாரிய அணியும் மோதுகின்றன. தொடர்ந்து நடைபெறும் நிறைவு விழாவில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் நந்தகுமார், கோவை மற்றும் பொள்ளாச்சி எம்பி.க்கள், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

x