கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்த இரு நாட்கள் ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும் முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, கே.எல்.ராகுல் 68, விராட் கோலி 47, ஷுப்மன் கில் 39, ரோஹித் சர்மா 23 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது.
ஷத்மான் இஸ்லாம் 7, மொமினுல் ஹக் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. மொமினுல் ஹக் 2 ரன்னில் அஸ்வின் பந்தில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் திருப்பு முனையை ஏற்படுத்தினார். சிறப்பாக பேட் செய்து வந்த ஷத்மான் இஸ்லாம் 50 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஜடேஜா சீரான இடைவெளியில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (19), லிட்டன் தாஸ் (1), ஷகிப் அல்ஹசன் (0) ஆகியோரை வெளியேற்றினார்.
இந்த 4 விக்கெட்களையும் 4 ரன்கள் இடைவெளியில் வங்கதேச அணி பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து மெஹிதி ஹசன் (9), தைஜூல் இஸ்லாம் (0), முஸ்பிகுர் ரஹிம் (37) ஆகியோரை ஜஸ்பிரீத் பும்ரா வெளியேற்ற வங்கதேச அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா, ஜடேஜாஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 8, ஷுப்மன் கில் 6 ரன்களில் மெஹிதி ஹசன் பந்தில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசிய நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி 29, ரிஷப் பந்த்4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றும் 18-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுவாகும். ஆட்ட நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வானார்கள். அஸ்வின் இந்தத் தொடரில் பேட்டிங்கில் 114 ரன்களும், பந்து வீச்சில் 11 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.
வங்கதேச அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 74.24 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
11-வது முறையாக தொடர் நாயகன்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தொடர் நாயகன் விருதை பெறுவது இது 11-வது முறையாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றிருந்த இலங்கையின் முரளிதரனின் சாதனையை சமன் செய்தார். முரளிதரன் 11-வது முறை தொடர் நாயகன் விருது வென்றிருந்தார்.
13-வது வெற்றி: வங்கதேச அணிக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 13-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்திருந்தன. இலங்கை, நியூஸிலாந்து ஆகிய 2 அணிகள் மட்டுமே ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் எதிரணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை 20 போட்டிகளிலும், ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 17 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளன.
312 பந்துகள்.. கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 312 பந்துகளே பேட்டிங் செய்தது. ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளை சந்தித்து ஓர் அணி வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும். இந்த வகை சாதனையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 1935-ம் ஆண்டு பார்டாஸில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 276 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு வெற்றி கண்டிருந்தது.
7.36 ரன் ரேட்: கான்பூர் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியாவின் ரன் ரேட் 7.36 ஆகும். ஒரு டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த அணியின் அதிகபட்ச ரன் ரேட் இதுவாகும். இதற்கு முன்னர் 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6.80 ரன் ரேட்டுடன் 340 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.
128.12 ஸ்டிரைக் ரேட்: கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஸ்டிரைக் ரேட் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 128.12 ஆகும். இரு இன்னிங்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் இது 3-வது அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் ஆகும். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (137.7), இங்கிலாந்தின் ஹாரி புரூக் (132.59) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.