டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா: 2-0 என வொயிட்வாஷ் ஆனது வங்கதேசம்!


கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 98 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியா அணி டெஸ்ட் தொடரை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கான்பூரில் நடைபெற்ற வங்கதேசம் - இந்தியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 74.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மோமினுல் ஹக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அடுத்ததாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

52 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று ஆடிய வங்க தேச அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஷட்மன் இஸ்லாம் மட்டும் நிலைத்து ஆடி 50 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் தாக்குபிடித்து ஆடிய முஸ்பிஹுர் ரஹிம் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

94 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். கில் 6 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கோலி 29 ரன்களுடனும், பந்த் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோது இந்தியா 17.2 ஓவர்களில் 98 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இதன் மூலமாக 2 - 0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வொயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

x