சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.
கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17-ல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர் அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 2 ரன்கள் கிளின் போல்ட்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல் டிராவிஸ் ஹெட்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 6 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தடுமாறியது.
பின்னர் வந்த ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரமுடன் சேர்ந்து ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரிபாதி 9 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் ரெட்டி, மார்க்ரமுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். அந்தவகையில் 10 ரன்கள் களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனிடையே எய்டன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார். 23 பந்துகள் களத்தில் நின்ற மார்க்ரம் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் எடுத்தார். 10.2 ஓவர்கள் முடிவில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இழந்தது.
இதையடுத்து ஆட வந்த ஹென்ரிச் கிளாசென் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க இதனிடையே சக்பாஸ் அகமது, அப்துல் சமத் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் பின் ஆட வந்த பேட் கம்மின்ஸ் சரிவில் இருந்த அணியை ஓரளவிற்கு மீட்டு கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 113 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. இதனால் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது
தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட சுனில் நரைன் அடுத்த பந்துலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெங்கடேஸ் ஐயர். ரஹ்மானுல்லா குர்பாஸுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்க விட்டர் வெங்கடேஸ் ஐயர். இதனிடையே குர்பாஸ் 39 ரன்களில் அவுட்டானார். ஆனால், மறுமுனையில் வெங்கடேஸ் ஐயர் 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். 10.3 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக வென்றது.