பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி; சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்


சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளேப் ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாக இது அமைந்தது.

போட்டியில் தோல்வியடைந்தாலும் 201 ரன்களை கடந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இருந்தது.

மகிழ்ச்சியில் பெங்களூரு அணியினர்

இதேபோல், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள்ளோ வென்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் டக்அவுட்டிலும், மிட்செல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

ரஹானே, ரச்சின் ரவீந்திரா கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நட்சத்திர நாயகன் தோனி தோனி 25 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். எனினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை தொடரிலிருந்து வெளியேற்றியது.

போட்டியில் மழை குறுக்கீடு நேர்ந்தபோது அதனைக் கடந்து ஆர்சிபி வெற்றி பெற்றதை, அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஆர்சிபி அணி, அதற்கு முந்தைய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. அதன் பிறகு போராடி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததை வெறும் அதிர்ஷ்டம் என்று மட்டுமே கருதி விடமுடியாது.

x