ஐபிஎல் தொடரில் நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் திட்டியது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனால் ராகுல் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் டி 20 தொடர் கடந்த மார்ச் 22ல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி தட்டுத்தடுமாறி 165 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்த இலக்கை துரத்திய ஹைதராபாத் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவரிலே எட்டிப் பிடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்தனர். நடப்பு ஐபிஎல் சீசனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஆட்டமாக இப்போட்டி அமைந்தது.
நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுலில் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், போட்டி முடிந்தவுடன் மைதானத்திலேயே நிற்க வைத்து ரசிகர்கள் முன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கே, ராகுலை கடுமையாக திட்டினார்.
மேலும் அவர் ராகுலிடம் காரசாரமாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். கே.எல்.ராகுலை எவ்வாறு இதுபோல் அவமரியாதை செய்யலாம் என்று ரசிகர்களும் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனால் லக்னோ அணி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே லக்னோ அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. எனவே கேப்டன் பதவியிலிருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த ராகுல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராகுலின் இந்த முடிவுக்கு அணி உரிமையாளர்களும் எந்த தடையும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கே.எல்.ராகுல் அடுத்த சீசனில் லக்னோ அணியை விட்டு வெளியேறுவார் என்றும் சொல்லப்படுகிறது