சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தோனேசியாவை சேர்ந்த ரோமாலியா என்ற வீராங்கனை, ஒரு ரன்கூட விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
மங்கோலியா நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 5-வது போட்டி கடந்த 24-ம் தேதி பாலி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தோனேசியா பெண்கள் கிரிக்கெட் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் சகாரணி 44 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவதாக களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில், கேப்டன் சென்சுரன் 7 ரன்கள் எடுத்திருந்தபோது இந்தோனேசிய வீராங்கனை ரோமாலியா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது அந்த அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடர்ந்து பந்து வீசிய ரோமாலியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 3.2 ஓவர்கள் வீசிய அவர் ஒரு ரன்கூட விட்டுக் கொடுக்காமல், அடுத்தடுத்து வந்த அனைத்து வீராங்கனைகளின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் அந்த அணி 24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீராங்கனை என்ற சாதனையை ரோமாலியா படைத்தார். இதற்கு முன்பாக அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் மற்றும் நெதர்லாந்து வீராங்கனை பிரட்டரிக் ஓவர்ஜிக் ஆகியோர் 3 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி இருந்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
ஆண்கள் சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, மலேசியாவின் சியாஸ்ருல் இத்ரஸ் சீனாவிற்கு எதிராக 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.