ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மற்றுமொரு தங்கம் வென்றிருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷௌ நகரத்தில் நடைபெற்று வருகின்றன. செப்.23 அன்று தொடங்கிய இந்தப் போட்டிகள் அக்.8 வரை நடைபெற உள்ளன. இவற்றில் கணிசமான வெற்றிகளை குவித்து வரும் இந்தியா, துப்பாக்கி சுடுதலில் இன்று ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 361 புள்ளிகளை வென்று கெனன் செனாய், பிரித்வி ராஜ் தொண்டைமான், சோரவர் சிங் ஆகியோர் அடங்கிய அணி தற்போது தங்கம் வென்றுள்ளது. இதே போட்டியில் குவைத் அணிக்கு வெள்ளியும், சீனாவுக்கு வெண்கலமும் பதக்கங்களாக கிடைத்துள்ளன.
புதிய வெற்றியின் வாயிலாக 10 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.