தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜடேஜா, ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 32 ரன் வித்தியாசத்தில், இந்தியா படுதோல்வியை சந்தித்தது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்திய வீரர்கள் சொதப்பினர். கே.எல்.ராகுல், விராட் கோலி, பும்ரா தவிர்த்து மற்ற வீரர்கள் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த சூழலில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக முகமது ஷமி அணிக்குத் திரும்பியுள்ளார். முன்னதாக மருத்துவ காரணங்களால் அவர் அணியில் இடம்பெற முடியாமல் போனது.
அதேபோல், முதல் டெஸ்டில் முதுகுவலி காரணமாக விளையாடாத ஜடேஜா, 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது முதுகுவலி தற்போது குணமடைந்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், அணியின் பந்து வீச்சு பலம் தற்போது கூடியுள்ளது. அதேநேரம், ஜடேஜாவுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் அல்லது அஸ்வின் யாரேனும் ஒருவர் அணியில் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள்!