இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டி, நேரலையில் ஒரு லட்சம் கோடி நிமிடங்கள் பார்வையாளர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் அதிரடியால் 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
உலகக்கோப்பையின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 போட்டிகளிலும் வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் குறித்த தரவு ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியே மிகப்பெரிய நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் நேரலையில் ஒரு லட்சம் கோடி நிமிடங்கள் பார்வையாளர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட தொடரை விட 38% அதிக பார்வையாளர்கள் என குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஐசிசியின் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்ற ஒரே போட்டி என்ற பெருமையை, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி பெற்றுள்ளது. மொத்தமாக 8760 கோடி பார்வையாளர்களை கொண்டு பதிவு செய்துள்ளது.
மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் 42,200 கோடி பார்வையாளர் நிமிடங்கள் பெற்று, 2011-ம் ஆண்டை விட 54% அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. 1690 கோடி பேர் இந்த போட்டியின் வீடியோக்களை பார்த்துள்ளனர். அனைத்து வீடியோக்களையும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 158% அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம் 20 ஓவர் உலகக் கோப்பை சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...