‘இதயம் நொறுங்கிப் போனேன்...’ மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் குறித்து நடிகை ரித்திகா சிங் வேதனை


ரித்திகா சிங் - சாக்‌ஷி மாலிக்

மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவருக்கு எதிராக, மல்யுத்த விளையாட்டை கைவிடுவதாக வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் அறிவித்ததற்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் என்பவர் தேர்வாகி இருக்கிறார். இவர் சம்மேளத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் ஆவார். பிரிஜ் பூஷணின் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நீண்ட போராட்டத்தினை நடத்தி வந்தனர். புதிய தலைவருக்கான தேர்தலில் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்பினர். ஆனால் பிரிஜ் பூஷணின் இடத்தை அவரது ஆதரவாளர் நிரப்பியதில், தங்களது போராட்டம் தோற்றுப் போனதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குமுறி வருகின்றனர்.

சாக்‌ஷி மாலிக்

குறிப்பாக மல்யுத்த வீராங்கனையான சாக்‌ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டையே தான் கைவிடுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக ஒரு பெண் வரவேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் பிரிஜ் பூஷண் ஆதரவாளரான சஞ்சய் சிங் போன்றவர்கள் தலைவரானதன் மூலம் எங்கள் எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. நியாயத்துக்கான எங்களது போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் மல்யுத்த விளையாட்டையே கைவிடுகிறேன்” என்று கண்ணீருடன் அறிவித்தார்.

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோரின் போராட்டத்துக்கு ஆரம்பம் தொட்டே ஆதரவு தெரிவித்து வரும் நடிகை ரித்திகா சிங், இது தொடர்பாக தனது எதிர்ப்பு மற்றும் வேதனையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “எனது மதிப்புக்குரிய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறேன். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சூடித் தந்த சாக்‌ஷி மாலிக், தனது இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பையும், கனவுகள் மற்றும் நம்பிக்கைகளை கைவிட்டு, விளையாட்டிலிருந்தே விலகுகிறேன் என்று சொல்லியிருப்பது பேரழிவுக்கு இணையானது” என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

இறுதி சுற்று திரைப்படத்தில் மாதவனுடன் ரித்திகா சிங்

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் உடன் சேர்ந்து, குத்துச்சண்டையை களமாகக் கொண்ட ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இவரும் அடிப்படையில் ஒரு தற்காப்புக்கலை வீராங்கனை என்பதாலும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்து வந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x