எல்லா ஏரியாவிலும் நாங்க கில்லி... 3 வடிவ போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!


இந்திய கிரிக்கெட் அணி

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல்முறையாக ஒரு நாள் போட்டிகள் டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதால் அனைத்து வடிவிலான தரவரிசை பட்டியல்களில் இந்திய அணி முதலிடம் பிடித்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி உள்ளது. ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதலிடம் பிடித்திருப்பது இது இரண்டாவது முறை என கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி

இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதலிடம் பெற்றிருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து இந்த முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

x