சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024-ன் முழு அட்டவணையை அறிவித்துள்ளது. இந்தப் போட்டி ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 வரை இலங்கையில் நடைபெற உள்ளது.
அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் 16 அணிகள் மோதுகின்றன. இதில் 11 முழு நேர உறுப்பு அணிகள் மற்றும் நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து அணிகள் களமிறங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜனவரி 13 அன்று தொடங்குகிறது, தொடக்க நாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
இலங்கையில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இலங்கை ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் கொழும்பு கிரிக்கெட் கிளப்பில் ஸ்காட்லாந்தை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. நியூசிலாந்து நேபாளத்தை பி. சாரா ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 14-ம் தேதி ஆர். பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், பிப்ரவரி 4-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
குரூப் பட்டியல்களில், இந்தியாவுடன் வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குழு ஏ பிரிவில் இணைந்துள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளன. குரூப் சி யில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவும், டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளன.