கரூரில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான கூடைப்பந்து: இன்று அரையிறுதிப் போட்டிகள்


கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (மே 26ம் தேதி) நடைபெற்ற 64வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் மோதிய புதுடெல்லி வடக்கு ரயில்வே மற்றும் புதுடெல்லி சென்ட்ரல் செக்ரடேரியட் அணிகள்.

கரூர்: 64வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் இன்று (மே 26ம் தேதி) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி கடந்த 5 நாட்களாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்கள் போட்டியில் ஏ மற்றும் பி பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள் போட்டியில் இன்று (மே 26ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறும் அரையிறுதி முதல் போட்டியில் சென்னை ஐசிஎப், லோனவ்லா இந்தியன் நேவி அணியும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் புதுடெல்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியும், புதுடெல்லி வடக்கு ரயில்வே அணிகள் மோதுகின்றன.

இவற்றில் வெற்றிப்பெறும் இரு அணிகளும் நாளை (மே 27ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. முன்னதாக 3ம் இடத்திற்கான போட்டியில் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடையும் இரு அணிகளும் மோதுகின்றன. வெற்றிப்பெறும் அணிக்கு எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் முதல் பரிசு ரூ.1,00,000, 2வது பரிசு ரூ.80,000, 3வது பரிசு ரூ.60,000, 4வது பரிசு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான 10வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 23ம் தேதி தொடங்கி கடந்த 3 நாட்களாக லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (மே 26ம் தேதி) இரவு 8.45 மணிக்கு நடைபெறும் 4வது நாள் போட்டியில் புதுடெல்லி வடக்கு ரயில்வே மற்றும் மும்பை மேற்கு ரயில்வே அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி நாளை (மே 27ம் தேதி) நடைபெறுகிறது.

பெண்களுக்கான போட்டிக்கான முதல் பரிசாக ரூ.75,000, 2ம் பரிசாக ரூ.40,000, 3ம் பரிசாக 30,000, 4ம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படும்.

முதலிடம் பெறும் ஆண்கள் அணியின் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் எல்ஜிபி நிறுவனம் சார்பாகவும், பெண்கள் அணியின் ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி சார்பாக ரூ.1,500 மதிப்புள்ள வெள்ளி நாணயம் வழங்கப்படுகிறது.

x