அர்ஷ்தீப் வேகத்தில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா; இந்திய அணி அபார வெற்றி!


அறிமுக வீரர் அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸின் அதிரடி பேட்டிங் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிவடைந்ததையடுத்து, ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் வெற்றி பெற தீவிர முயற்சி எடுக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்நிலையில் முதல் ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பெர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியில் களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ், ரசீ வான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் டோனி டி ஜோர்ஸி மட்டும் ரன்களை சேகரிக்க போராடினார். இருப்பினும் அவரும் 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் அன்டிலே பெலுக்வாயோ மட்டும் 33 ரன்கள் சேர்த்து அவரும் அர்ஷ்தீப்சிங்கின் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து 27.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து அசத்தல்

இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுகவீரர் அர்ஷ்தீப் சிங், 10 ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி, 37 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதேபோல் அவேஷ் கான் 8 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனுபவ வீரர் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இருப்பினும் சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றனர். 52 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து 16.4 ஓவர் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கான 117 ரன்கள் எட்டியது. சாய் சுதர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் குவித்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர், அன்டிலே பெலுக்வாயோ தலா ஒரு விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

x