மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு: வங்கதேச அணி 107 ரன் சேர்ப்பு


கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்தது.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித்சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார்.இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக வங்கதேச அணியில்ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நஹித் ராணா நீக்கப்பட்டு கலீல் அகமது சேர்க்கப்பட்டார்.

நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஜாகிர் ஹசன் 24 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் சிலிப் திசையில் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம் 36 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நலையில் மொமினுல் ஹக்குடன் இணைந்த கேப்டன் நஜ்முல்ஹொசைன் ஷான்டோ பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 54 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவிச்சந்திரன் அஸ்வின் பிரித்தார். நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 57 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. மொமினுல் ஹக் 81 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 40ரன்களும் முஸ்பிகுர் ரஹிம் 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் சாதனை: வங்கதேச அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் அஸ்வின், நஜ்முல் ஹொசைன் ஷான்டோவை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் அவர், ஆசிய கண்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளேவை (419) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார். அஸ்வின் இதுவரை 420 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இந்த வகை சாதனையில் இலங்கையின் முரளிதரன் 612 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

x