காலே: இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. திமுத் கருணரத்னே 109 ரன்கள் விளாசியிருந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.
அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 147 பந்துகளில், 1 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 185 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு கமிந்து மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடி 107 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 44 ரன்களில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குஷால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய குஷால் மெண்டிஸ் 148 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 10-வது சதமாக அமைந்தது. இலங்கை அணி 163.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 602 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
கமிந்து மெண்டிஸ் 250 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 182 ரன்களும் குஷால் மெண்டிஸ் 149 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 106 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
கமிந்து மெண்டிஸ் 182 ரன்கள் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக ஆயிரம் ரன்களை எட்டியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தை டான் பிராட்மேனுடன் பகிர்ந்து கொண்டார். கமிந்து மெண்டிஸ் 13 இன்னிங்ஸ்களில் 1,004 ரன்கள் குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்கிளிஃப், மேற்கு இந்தியத் தீவுகளின் எவர்டன் வீக்ஸ் ஆகியோர் தலா 12 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 2, டேவன் கான்வே 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 6 ரன்களும், அஜாஸ் படேல் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 580 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது நியூஸிலாந்து அணி.