டி20, டெஸ்டில் ஓய்வு: ஷகிப் அல் ஹசன் அறிவிப்பு


கான்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார்.

மேலும், தனது நாட்டு கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் பிரியாவிடை போட்டியை விளையாட அனுமதிக்காவிட்டால் இந்தியாவுக்கு எதிராக கான்பூரில் இன்று (செப்டம்பர் 27-ம் தேதி) தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ஷகிப் அல்ஹசன்.

37 வயதான ஷகிப் அல்ஹசன் இதுவரை வங்கதேச அணிக்காக 120 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேவேளையில் 69 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4,453 ரன்களையும், 242 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். கான்பூரில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

எனது கடைசி சர்வதேச டி20 போட்டியை உலகக் கோப்பை தொடரில் விளையாடினேன். இதுகுறித்து தேர்வாளர்களுடன் ஆலோசித்தோம். 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, நான் வெளியேறுவது இதுவே சரியான தருணம். வங்கதேச கிரிக்கெட் வாரியம் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்கும் என்று நம்புகிறேன்.

மிர்பூரில் எனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் விருப்பத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். நான் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள், எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார்கள். அது நடக்கவில்லை என்றால், கான்பூரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது கடைசி போட்டியாக இருக்கும். இவ்வாறு ஷகிப் அல் ஹசன் கூறினார்.

x