இந்தியாவிடம் தோற்றது நல்லது; பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி!


ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றது நல்லது தான் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 228 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இந்தியாவிடம் தோற்றது நல்லதிற்கே என்று கூறியுள்ளார்.

மூன்று மாதங்களாக எந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியடையவில்லை என்று கூறிய அவர், இந்த தோல்வி, களத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை நினைவுப்படுத்தி இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்தியா உடனான தோல்வியை ஒருவகையில் பரிசாகவே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ள அவர், இதற்காக இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு அடிக்கடி கிடைக்கவில்லை.

இந்திய அணிக்கு எதிராக விளையாட கிடைத்த இந்த வாய்ப்பு அருமையானது. இதனை ஒரு நேர்மறையான அறிகுறியாக தான் எடுத்து கொள்ள வேண்டும். எங்களது பேட்ஸ்மேன்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் சரியான நிலைக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

x