சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பவுலருக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்திலும் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா 854 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தில் ஹாசில்வுட் 847 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார்.
அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 475 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அஸ்வின் 370 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 3ம் இடத்தில் உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை செய்திருந்தார். தற்போது அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலும் 8 விக்கெட்களை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை முந்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடிப்பார். அஸ்வின் தற்போது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 இன்னிங்ஸில் விளையாடி 522 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.