மழை காரணமாக நேற்று பாதியில் கைவிடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 ஆட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 3-வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 24.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்திருந்தது. கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த போட்டிக்காக ஏற்கனவே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்று போட்டி மீண்டும் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
நேற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் இன்று அதிரடியாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். அவரை தொடர்ந்து கோலியும் ஒருநாள் போட்டியில் தனது 66வது அரை சதத்தைக் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது.