ஆசிய கிரிக்கெட்டில் அதிக சிக்சர்! சாதனை படைத்தார் ரோகித் சர்மா!


ரோகித் சர்மா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து சாதனைப் படைத்துள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஷாஹித் அப்ரிடி

இந்நிலையில் இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்த போது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

இதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 3 வீரர்களில் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 21 இன்னிங்ஸில் 26 சிக்ஸர் அடித்துள்ளார். 24 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இந்திய வீரர் ரோஹித் சர்மா 26 சிக்ஸர் விளாசியுள்ளார். 24 இன்னிங்ஸில் இலங்கை வீரர் சனாத் ஜெயசூர்யா 23 சிக்ஸரும், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 13 இன்னிங்ஸில் 18 சிக்ஸரும் அடித்துள்ளனர். அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார். ரோகித் சர்மா 33 சிக்ஸரும், கிறிஸ் கெயில் 30 சிக்ஸரும், ஷாஹித் அப்ரிடி 29 சிக்ஸரும், சுரேஷ் ரெய்னா 25 சிக்ஸரும் அடித்துள்ளனர்.

x