``இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே கேப்டனுமான தோனியை ரசிகர்கள் கடவுள் போல் பார்ப்பதை நான் நேரில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்'' என ஆஸ்திரேலிய வீரர் காமெரூன் க்ரீன் கூறியுள்ளார்.
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக ஒருநாள் போட்டி கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி 2007ல் நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் மகேந்திர சிங் தோனி. அதன்பின்னர் 2011 ஒரு நாள் போட்டிகளின் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனி கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்திர சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார் மிஸ்டர் கூல் தோனி. இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், தோனியை ரசிகர்கள் கடவுள் போல் பார்ப்பதை நான் நேரில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன் என ஆஸ்திரேலிய வீரர் காமெரூன் க்ரீன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " மும்பை அணிக்காக சென்னையில் ஆடியபோது, ரசிகர்கள் தோனியை வரவேற்கும் விதம் குறித்து ஆச்சரியம் அடைந்தேன். அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஐபிஎல் தொடரில் தோனி இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் அவருக்கான வரவேற்பினை பார்க்க முடிந்தது.
சேப்பாக்கத்தில் அவர் விளையாடும் போது நான் மைதானத்தில் இருந்ததை பெருமையாக நினைக்கிறேன். அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கிறார்கள். சென்னை மைதானத்தில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கி வரும் போது ரசிகர்கள் கொடுக்கும் அந்த வரவேற்பை நான் நேரில் பார்த்ததே அதற்கு சாட்சி" என்று கூறியுள்ளார்.