காலே: நியூஸிலாந்துக்கு எதிரான முதல்டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
காலே நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 305 ரன்களும், நியூஸிலாந்து 340 ரன்களும் எடுத்தன. 35 ரகள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருணாரத்னே 83, தினேஷ் சந்திமால் 61, ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன்கள் சேர்த்தனர்.
275 ரன்கள் இலக்குடன் பேட்செய்த நியூஸிலாந்து அணி 4-வதுநாள் ஆட்டத்தின் முடிவில் 68 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 91, அஜாஸ் படேல் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 71.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ரச்சின் ரவீந்திரா 92 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கடைசி வீரராக வில்லியம் ரூர்கி (0) போல்டானார். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5, ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி இதே மைதானத்தில் தொடங்குகிறது.