அமிதாப் பச்சனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டிகளை தரிசிப்பதற்கான ’கோல்டன் டிக்கெட்’ இன்று(செப்.8) வழங்கப்பட்டது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், அக். 5 அன்று தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ’கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கவுன்சிலான, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இன்று இதனை வழங்கினார்.
இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டரும், நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர், கோல்டன் டிக்கெட் பெறும் இரண்டாவது இந்திய ஆளுமை ஆவார். சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை முரசறைந்து வரவேற்கும் விதமாய், பல்துறைகளின் பிரபல நட்சத்திரங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டியை வரவேற்கும் விதமாகவும், ரசிகர்கள் மத்தியிலான கொண்டாட்ட மனநிலைக்கு இசைவாகவும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த கோல்டன் டிக்கெட்டுகளைப் பெறும் பிரபலங்கள், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளின் அனைத்து ஆட்டங்களையும் சிறப்பு மாடத்தில் அமர்ந்து ரசிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இதனிடையே அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் வரிசையில் அடுத்த கோல்டன் டிக்கெட் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.