வீணான ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டம்: முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி | SL vs NZ


கல்லே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை அணியின் வெற்றிக்கு தடுப்பு அரணாக விளங்கினார் நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திரா.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 18-ம் தேதி (புதன்கிழமை) கல்லே நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 305 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் சதம் விளாசி அணியை காத்தார். தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் குவித்தது. டாம் லேதம், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் அரை சதம் கடந்தனர். கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் நேர்த்தியாக விளையாடி இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்கள் எடுத்தது. கருணரத்னே, சந்திமால், மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடந்தனர். நியூஸிலாந்து சார்பில் அஜால் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது.

இருப்பினும் சீரான இடைவெளியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்தனர். ரச்சின் ரவீந்திரா, இலங்கை அணியின் வெற்றியை தன்னால் இயன்ற வரை தனது ஆட்டத்தின் மூலம் தடுப்பு அரணாக நின்று தடுத்தார். 168 பந்துகளை எதிர்கொண்ட அவர் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் 71.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூஸிலாந்து. இதன் மூலம் 63 ரன்களில் இலங்கை வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை அள்ளிய பிரபாத் ஜெயசூர்யா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

x