இந்த தடவை எங்க ஆட்டத்தை பார்ப்பீங்க... இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை!


இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் எங்களின் 100 சதவிகித ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 38.4 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் பாகிஸ்தான் அணி தனது அடுத்த சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிய குரூப் சுற்று போட்டி மழையால் கைவிடப்பட்டதால், சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா அணிக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ள கருத்துகள் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அணியுடனான வெற்றிக்கு பின் பாபர் அசாம் பேசுகையில், “இன்றைய ஆட்டத்தின் போது அதிக வெப்பம் இருந்தது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் அதிக நன்றி கூற வேண்டும். முதலில் ஷாகின் அப்ரிடிக்கும், இரண்டாவது ஹாரிஸ் ராஃப்-க்கும் நன்றி கூற வேண்டும். இந்த ஆடுகளத்தை பார்த்த பின் தான் ஃபஹீமை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். பிட்சில் கொஞ்சம் புற்கள் இருந்ததால், அதனை பயன்படுத்தினோம். நாங்கள் எப்போதும் லாகூரில் விளையாடினாலும், ரசிகர்கள் ஆதரவு நன்றாக இருக்கும்.

வங்கதேச அணியுடனான வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நாங்கள் எப்போதும் பெரிய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியிலும் எங்களின் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

x