வங்கதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பந்தை கையால் தள்ளி விட்டதற்காக, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை பறிகொடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது கிரிக்கெட்டிற்கு புதிய விதிகளை வகுத்து வருகிறது. இந்த விதிகள் அறிவிக்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்கதேசம் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது டைம் அவுட் விதி பயன்படுத்தப்பட்டது. இதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் இந்த விதியை பயன்படுத்தியதால், மேத்யூ விக்கெட்டை இழந்தார். இது குறித்து பின்னர் கருத்து தெரிவித்த கிரிக்கெட் ரசிகர்கள், வங்கதேச அணியின் கேப்டன் ஹசன் இந்த விதிப்படி விக்கெட் கேட்டதை திரும்ப பெற்று இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். ஆனால் இதை மறுத்த ஹசன், ஒரு அணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவதே கேப்டன் என்ற முறையில் சரியானது என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஷேர்-இ-பங்க்ளா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வங்கதேசம் விளையாடி வருகிறது.
இதனிடைய வங்கதேச அணி 40.4 ஓவரில் 104 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜேமிசன் வீசிய பந்தை, முஷ்பிகுர் ரஹீம், தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் பட்டு பின்னால் இருந்த விக்கெட்டுகள் மீது விழப்போனது. உடனடியாக ரஹீம் தனது கையால் அந்த பந்தை தடுத்தார். இதனால் ஹேண்ட் அவுட் என்ற விதியின் கீழ் விக்கெட் வழங்குமாறு நியூசிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். உடனடியாக ரஹீமை அவுட் ஆனதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!
எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி