பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை -குஜராத் அணிகளுக்கான போட்டி டிக்கெட் விலையை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக குறைந்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளின் கேப்டன்களும் மாற்றப்பட்டுள்ளதால், இன்று நடைபெறும் போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
முன்னதாக சிஎஸ்கே -பெங்களூரு அணி மோதும் இந்த போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் முறையில் மட்டுமே பெற முடியும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, கடந்த 18-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.1,700, முதல் அதிகபட்சமாக ரூ,7,500 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்த தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
சிறிது நேரத்தில் டிக்கெட் விற்பனை தளம் சரியாகும் என பார்த்தால் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக டிக்கெட் விற்கப்படும் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனைக்கும் வந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு போட்டியைக் காண டிக்கெட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கும் நிலை உள்ளதாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் சமூக வலைதங்களிலும் ஐபிஎல் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் எதிரொலியால், சென்னையில் வரும் 26-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை ஆன்லைனில் தொடங்குகிறது. சிஎஸ்கே, பெங்களுரு போட்டிக்கான ஆன்லைன் விற்பனையில் குளறுபடிகள் நிலவியது. டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். எனவே அதனை சரிப்படுத்தவும், சிஎஸ்கே -குஜராத் அணிகளுக்கு இடையேயான டிக்கெட் விற்பனையில் சிக்கல் இருக்காது எனவும், டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் நாளை தெரியவரும்.