அதிர்ச்சி வீடியோ... 'தங்கமகன்' நீரஜ் சோப்ரா சிலையில் இருந்த ஈட்டி திருட்டு!


ஈட்டி திருடப்பட்ட நீரஜ் சோப்ரா சிலை.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் சிலையில் இருந்த ஈட்டியை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீரஜ் சோப்ரா

ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை கவுரவிக்கும் வகையில் மீரட் மேம்பாட்டு ஆணையம், ஹாபூர் அடா சௌக்கில் உள்ள சோப்ராவின் சிலையை நிறுவியது. இந்த இடத்தில் பல ஒலிம்பிக் வீரர்களின் சிலைகள் உள்ளன.

நீரஜ் சோப்ரா

இந்நிலையில், நீரஜ் சோப்ரா சிலையில் இருந்த எட்டியை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 24 மணி நேரமும் காவல் துறை பாதுகாப்பில் இருக்கும் பகுதியில் சிலையில் இருந்த ஈட்டி எப்படி திருடப்பட்டது என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிக்க மீரட் போலீஸார், தனிப்படையை அமைத்துள்ளனர்.

நீரஜ் சோப்ரா சிலை ஃபைபர் மற்றும் தங்க வண்ணப்பூச்சு கலவைகளால் செய்யப்பட்டது. இது தங்கம் அல்லது வேறு விலை உயர்ந்த உலோகம் என மர்மநபர்கள் திருடியிருக்கலாம் என்று போலீஸார் கூறினர். அத்துடன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீரஜ் சோப்ரா சிலையில் இருந்து ஈட்டி திருடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

25 வயதான சோப்ரா சமீபத்தில் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 2023-ல் தங்கத்தை வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கத்துடன், சோப்ரா இப்போது அனைத்து முக்கிய சர்வதேச போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நீரஜ் சோப்ரா டோக்கியோவில் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிலையில் இருந்து ஈட்டி திருடப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x