10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது!


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேபாள அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மா இணை ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதன்பின் டக்வோர்த் விதிப்படி, இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் அதிரடியை கையாண்டனர். இருவரும் வானவேடிக்கைகளை நிகழ்த்தி அடுத்தடுத்தது அரைசதம் கடந்தனர். இதனால், இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் 74 ரன்களும், கில் 67 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

x