இலங்கையில் தன்னை சீண்டிய விராட் கோலி ரசிகர்களுக்கு எதிராக, கவுதம் கம்பீர் ஒற்றை விரல் நீட்டி பழித்தது சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது.
இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, கேண்டி மைதானத்தில் இந்திய - நேபாள அணிகள் மோதின. கிரிக்கெட் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், இந்த போட்டியின் வர்ணனையாளராக பங்கேற்றார். விளையாட்டின் இடையே மழை காரணமாக இடம்பெயர்ந்த கவுதம் கம்பீர், பார்வையாளர் மாடத்தை கடந்தபோது, விராட் கோலி ரசிகர்களின் குரல் சீண்டலுக்கு ஆளானார்.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், அரசியலில் குதித்து பாஜக எம்பியாக திகழ்கிறார். ஆனபோதும் கிரிக்கெட் மைதானத்தில் இதர நட்சத்திர வீரர்களுக்கு இணையாக தான் ஜொலிக்க முடியாது போனது குறித்த ஏக்கம் அவரை இப்போதும் துரத்தி வருகிறது. தோனி முதல் கோலி வரை விமர்சனம் என்ற பெயரில் கவுதம் கம்பீர் வசை பாடியது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்பாலும் பொதுவெளியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஐபிஎல் போட்டியின்போது, லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீருக்கும், ஆர்சிபி அணியின் கோலிக்கும் இடையிலான நேரடி மோதலில் வார்த்தைகள் தடித்தன. இந்த சம்பவத்தை அடுத்து, கம்பீரை எங்கே கண்டாலும் கேரோ செய்வதை கோலி ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த வகையில், இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, கோலி ரசிகர்களின் சீண்டலுக்கு மீண்டும் கவுதம் கம்பீர் ஆளானார். கோலி ரசிகர்கள் பார்வையில் கம்பீர் விழுந்ததும், ரசிகர்கள் ஒருமித்த உரத்த குரலில் ’கோலி.. கோலி’ என்று கத்தி வெறுப்பேற்றினார்கள். இதனால் சீற்றமடைந்த கம்பீர், கோலி ரசிகர்களை நோக்கி நடுவிரல் காட்டியபடி நகர்ந்தார்.
இதே போன்று அமித் ஷா மகனும் பிசிசியை தலைவருமான ஜெய்ஷா, கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது மாடத்தில் அமர்ந்தபடி, மோசமான செய்கையை கையால் வெளிப்படுத்தியதாக சர்ச்சைக்கு ஆளானார். அந்த வரிசையில் கம்பீரும் தற்போது கேமரா கண்களில் சிக்கியிருக்கிறார். கோலி ரசிகர்களின் வெறுப்பேற்றலும், கம்பீரின் எதிர்வினையும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.