புற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்!


ஹீத் ஸ்ட்ரீக்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இன்று காலமானார். அவருக்கு வயது 49.

நீண்ட காலமாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக், சில வாரங்களுக்கு முன் உயிரிழந்ததாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்கோ சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின் இந்த செய்தி பொய்யானது என்றும், ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருப்பதாக ஒலோங்கோ ரிட்டன் அடித்தார். இந்த நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் இன்று உயிரிழந்துள்ளதை அவரது மனைவி நாடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்

ஹீத் ஸ்ட்ரீக் காலமான செய்தியை ஜிம்பாப்வே முன்னாள் சர்வதேச வீரர் ஜான் ரென்னியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதில்: " ஸ்டீக் அதிகாலையில் மாடபெலே லேண்டில் உள்ள அவரது பண்ணையில் காலமானார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களால் சூழப்பட்டிருந்தார். புற்றுநோயுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் நிம்மதியாக உயிரிழந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

பேட்டிங் செய்யும் ஹீத் ஸ்ட்ரீக்

சாதனை

ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹீத் ஸ்ட்ரீக், 4933 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம்பாப்வேயின் ஒரே வீரர் என்ற பெருமை ஸ்ட்ரீக்கு உண்டு.

அவர் மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

x