உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் ஆடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்து வருகிறார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் முறையாக இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த நிலையில்தான் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் சில போட்டிகளில் ஆடமாட்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு கடைசிப் போட்டியில்கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து மீண்டு வந்த போது, அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தற்போது உடற்தகுதியை மேம்படுத்த வேண்டி மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று இருக்கிறார்.அங்கே அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைகளின் அடிப்படையில் அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பயிற்சி செய்து உடற் திறனை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அவர் 2024 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய முடியாத நிலையில் இருக்கிறார். வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்கும் நிலையில், 24ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.
அதனைத் தொடர்ந்தும் சூர்யகுமார் யாதவின் உடல்நிலை மேம்படவில்லையெனில் அவர் இன்னும் சில போட்டிகளிலும் ஆடமுடியாத சூழல் ஏற்படலாம். இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.