2023ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.
பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணி வீரர்கள் 160 ரன்னுக்கு வங்கதேசத்தை சுருட்டினர். இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணி 39 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மதீஷ பதிரானா, மஹேஷ தீக்ஷனா ஆகிய இருவரும் தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணிக்காக விளையாடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஹசரங்கா, மதுசங்கா, சமீரா ஆகியோர் அணியில் இல்லையென்றாலும், தோனியிடம் பாடம் கற்ற நாங்கள் இருக்கிறோம் என களமிறங்கிய இருவரும் வங்கதேச பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இதில் பதிரானா 4 விக்கெட்டுகளையும், மஹேஷ தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிரடி காட்டி தோனியின் படை வீரர்கள் வெற்றியைப் பறித்திருக்கிறார்கள் என இவர்களது சிறப்பான ஆட்டத்தை சமூக வலைதளங்களில் பலரும் சிலாகித்து, தல தோனிக்கும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.